ஒரு நொடி க(வி)தை

நடைபிணங்களாய் வாழ்வோரின் உயிர்சேதம் ஒரு பொருட்டில்லை.
கூடாரங்களை பெயர்த்த காற்றுக்கு மேலும் சிதைக்க பொருள் கிடைக்கவில்லை.
வாக்குரிமை இவர்களுக்கிலை; வாக்குறுதி தர அரசியல்வாதி கால் வைக்கவில்லை.
நாளேட்டில் மூன்றாம் பக்க செய்தி பெட்டியாய் அடங்கிப் போயிற்று,
அகதிகள் முகாமைத் தாக்கிய சூறாவளி.

ஒரு நொடி க(வி)தை

காதலி கவிதை நூல் பரிசளித்தாள்.


காதலன் பூங்கொத்துப் பரிசளித்தான்.


காதலைத் துறந்த மணமக்கள் புன்முறுவலோடு மேடையில் நின்றார்கள்.


திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

சில நொடி க(வி)தை

வீட்டின் நிலவரம், பிள்ளைப் பெற்ற மதிப்பெண்,

அம்மாவின் உடல்நிலை, அவள் முதலாளியின் கெடுபிடி

அனைத்தையும் விசாரிக்க ஆசை உண்டு.

நேரம் இல்லை.

திரளின் நடுவே அவள் முன்வந்தபோது வினவினேன்.

'நல்லா இருக்கியா?'

பதிலாக கிடைத்தது கண்ணீர்.

எங்கோ உள்ளிருந்து எட்டிப் பார்த்தது அவள் கோபம்.

கைதானது நான்.

தண்டனை அவளுக்கு.

சற்றே சிறிய கதை

முருகனின் அம்மா சண்டைக்கு வந்தாள்...

'நாலு எட்டுத் தள்ளி இருக்கும் பள்ளிக்கு, மாதம் ஐநூறு அதிகம்'.

அவன் அப்பா மௌனமாய் தலையசைத்தார்.


மாலையில் வேறொரு பெண்ணை ஏற்றி மாடர்ன் லாட்ஜ்-க்கு வண்டியை திருப்ப,

வாசலில் முருகனின் அப்பா.


'முன்னமே வந்துட்டீங்களா' என்று அவள் குழைய,

அவசரமாய் கைவிட்டு பணத்தை எடுத்தார்.

எண்ணிப் பார்த்தேன்.


சில்லறையூடே நூறு ரூபா நோட்டுக்கள்.

ஒரு நொடி க(வி)தை

பட்டப்படிப்பில் தங்க மெடல்,

மேற்படிப்பில் முதல் வகுப்பு.


வாங்கிக் குவித்திருந்த சான்றிதழ்களைப் பார்த்ததும் அசந்தே விட்டனர் மாப்பிள்ளை வீட்டில்.


ஒரு வார இடைவெளியில் திருமணம்,

ஒரு மாதக் காலத்தில் என் அமெரிக்கப் பயணம்.


நான்காண்டுகளாய் 'கிச்சன் கில்லாடி' நான்.

சில நொடி க(வி)தை

அகரவரிசைப் பட்டியலில் அவன் பெயர் இல்லை.


தேர்ச்சிப் பெறாதவனைப் பெற்றெடுத்தோர் மனம் உடைந்தனர்.

அப்பா அடித்தார். அம்மா தடுத்தாள், புலம்பினாள்.


ஒரு முடிவுடன் கிளம்பினான்.

சினிமாவில் சேர சென்னைக்குச் சீட்டெடுத்தான்.


அடுத்த நாள் தினசரியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் பட்டியல் வெளிவந்தது.


இவனுக்கு முதலிடம்.

ஒரு நொடி க(வி)தை - தெய்வீகக் காதல்

காதல் கைகூட நெய்விளக்கு ஏற்றினேன்.


பிரகாரம் சுற்றி வரும் போது கண்களில் தென்பட்டது என் காதலனின் வேண்டுதல்.


கோவில் சுவற்றில் வரையப்பட்ட ஒரு இதயம்.


உள்ளே எங்கள் இருவரின் பெயர்கள்.