சற்றே சிறிய கதை

முருகனின் அம்மா சண்டைக்கு வந்தாள்...

'நாலு எட்டுத் தள்ளி இருக்கும் பள்ளிக்கு, மாதம் ஐநூறு அதிகம்'.

அவன் அப்பா மௌனமாய் தலையசைத்தார்.


மாலையில் வேறொரு பெண்ணை ஏற்றி மாடர்ன் லாட்ஜ்-க்கு வண்டியை திருப்ப,

வாசலில் முருகனின் அப்பா.


'முன்னமே வந்துட்டீங்களா' என்று அவள் குழைய,

அவசரமாய் கைவிட்டு பணத்தை எடுத்தார்.

எண்ணிப் பார்த்தேன்.


சில்லறையூடே நூறு ரூபா நோட்டுக்கள்.

ஒரு நொடி க(வி)தை

பட்டப்படிப்பில் தங்க மெடல்,

மேற்படிப்பில் முதல் வகுப்பு.


வாங்கிக் குவித்திருந்த சான்றிதழ்களைப் பார்த்ததும் அசந்தே விட்டனர் மாப்பிள்ளை வீட்டில்.


ஒரு வார இடைவெளியில் திருமணம்,

ஒரு மாதக் காலத்தில் என் அமெரிக்கப் பயணம்.


நான்காண்டுகளாய் 'கிச்சன் கில்லாடி' நான்.

சில நொடி க(வி)தை

அகரவரிசைப் பட்டியலில் அவன் பெயர் இல்லை.


தேர்ச்சிப் பெறாதவனைப் பெற்றெடுத்தோர் மனம் உடைந்தனர்.

அப்பா அடித்தார். அம்மா தடுத்தாள், புலம்பினாள்.


ஒரு முடிவுடன் கிளம்பினான்.

சினிமாவில் சேர சென்னைக்குச் சீட்டெடுத்தான்.


அடுத்த நாள் தினசரியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் பட்டியல் வெளிவந்தது.


இவனுக்கு முதலிடம்.

ஒரு நொடி க(வி)தை - தெய்வீகக் காதல்

காதல் கைகூட நெய்விளக்கு ஏற்றினேன்.


பிரகாரம் சுற்றி வரும் போது கண்களில் தென்பட்டது என் காதலனின் வேண்டுதல்.


கோவில் சுவற்றில் வரையப்பட்ட ஒரு இதயம்.


உள்ளே எங்கள் இருவரின் பெயர்கள்.

ஒரு நொடி க(வி)தை

'மரபுக் கவிதையெல்லாம் யார் சார் படிக்கிறாங்க?


நாலு ஹைக்கு எழுதுங்க...


நல்லா இருந்தா அடுத்த வாரமே பதிக்கிறேன்'.


எழுத முற்ப்பட்டேன்.


என் மூன்றாண்டுப் பட்டப்படிப்பை மூன்றே வரிகளில்.

ஒரு நொடி க(வி)தை

இரயிலுக்காகக் காத்திருந்த நேரத்தில் வானத்தை ரசித்தேன்.

தேய்பிறையா வளர்பிறையா?

நட்சத்திரங்கள் நகர்ந்தனவா?

தெரியவில்லை...

அருந்ததியை தேடித் தலைத் திருப்பினேன்.


தண்டவாளத்தின் தகடு தலையில் இடித்தது.

ஒரு நொடி க(வி)தை

தனியே சந்தித்தான். இளித்தப்படி நீட்டினான்.

மனம் குறுகுறுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்.

கைகள் நடுங்கிய படி வாங்கினேன்.

'தப்பில்லை' என்றான். சிரித்தேன்.

என் பைக்குள்ளே ஒளிந்தது -

நான்முதன்முதலாக வாங்கிய லஞ்சம்.